என் அன்பு மகன் தீமோத்தேயுவுக்கு, கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்குள்ள வாழ்வைப்பற்றிய வாக்குறுதியை அறிவிப்பதற்குக் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக அனுப்பப்பட்ட சின்னப்பன் யான் எழுதுவது:
உம்மிடத்திலுள்ள நேர்மையான விசுவாசத்தை நினைவிற்கொண்டு வருகிறேன். இத்தகைய விசுவாசம் முதலில் உம் பாட்டி லோவிசாள், உம் தாய் ஐனிக்கேயாள் இவர்கள் உள்ளங்களில் குடி கொண்டிருந்தது. அதே விசுவாசம் உம் உள்ளத்திலும் இருக்கிறதென உறுதியாக நம்புகிறேன்.
ஆதலின் ஆண்டவரைப்பற்றிச் சாட்சியம் கூற வெட்கப் படாதீர். அவருடைய கைதியான என்னைக் குறித்தும் வெட்கப்படாதீர். கடவுளின் வல்லமை பெற்று நற்செய்திக்காக என்னோடு துன்புறத் தயங்காதீர்.
கடவுள் நம்மை மீட்டு நமக்குப் பரிசுத்த அழைப்பை அளித்துள்ளார். நம்முடைய செயல்களை முன்னிட்டு அவ்வாறு செய்யவில்லை; தாமே வகுத்த திட்டத்திற்கும் தமது அருளுக்கும் ஏற்பவே அவ்வாறு செய்தார். இவ்வருள் எல்லாக் காலங்களுக்கு முன்னரே கிறிஸ்து இயேசுவில் நமக்குக் கொடுக்கப்பட்டது;
இக்காலத்தில் நம் மீட்பராம் கிறிஸ்து இயேசு உலகுக்குப் பிரசன்னமானதால் வெளிப்படையாயிற்று. அவர் சாவை அழித்து சாவே அறியா வாழ்வை நற்செய்தியின் வழியாய் ஒளிரச் செய்தார்.
இதன் பொருட்டே நான் இத்துன்பங்களுக்கு உள்ளானேன் ஆனால், வெட்கப்படவில்லை, யாரை நம்பியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். அவர் என்னிடம் ஒப்படைத்ததை அந்த இறுதி நாள் வரை பாதுகாக்க அவர் வல்லவரென்று நான் உறுதியாய் நம்புகிறேன்.
கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் பெற்றுக்கொள்ளும் விசுவாசத்திலும் அன்பிலும் வாழ்பவராய் என்னிடமிருந்து நீர் கேட்டறிந்த நலமிக்க வார்த்தைகளை வாழ்க்கைச் சட்டமாகக் கொண்டிரும்.
ஒனேசிப்போருவின் குடும்பத்தின் மேல் ஆண்டவர் இரக்கம் காட்டுவாராக. ஏனெனில், அவர் துன்பங்களில் எனக்கு அடிக்கடி ஆறுதலளித்தார்; விலங்கிடப்பட்ட என்னைக் குறித்து வெட்கப் படவில்லை.